சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று காலை (மே 16) வந்து கொண்டிருந்த மின்சார ரயில் சைதாப் பேட்டை அருகே வந்த போது பெட்டிகள் கழன்றதன் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் காலை 5.30 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென ரயிலின் 4 பெட்டிகள் இணைக்கும் பகுதி கழன்று வந்தது. இதையடுத்து ரயிலை சரி செய்ய தாம்பரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அவ்வழியாக ரயில்கள் ஏதும் வராததால் கோடம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம்,பெருங்களத்தூர் என பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பாண்டிச்சேரி செல்லும் விரைவு ரயிலில் ஏறி செல்லலாம் என்றும் அது அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலகம் பல்வேறு பணிகளுக்கு செல்ல போக்குவரத்து பாதிப்படும் என அறிந்து உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ரயில் சேவை சீர் செய்யப்பட்டது. 2-வது நடைமேடை வாயிலாக செங்கல்பட்டு செல்லும் ரயில்களும், 4-வது நடைமேடை வாயிலாக தாம்பரம் செல்லும் ரயில்களும் இயக்கும் என ரயில் நிர்வாகம் அறிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“