தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆர்.கே.நகர் பிரசாரம் பாதிக்கப்படும் என தெரிகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத தாழ்வு பகுதி, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவியது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
7ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசைய்ல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும் என்பதால், டிசம்பர் 5 தேதி முதல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில், தமிழகம், புதுவையிலும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில்ல் கன மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
தமிழகம் புதுச்சேரியில் 5ம் தேதி மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
6ம் தேதி, கடலோர தமிழகம் புதுச்சேரியில் சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
7ம் தேதி தமிழகத்திலும் புதுவைய்லும் பலத்த மழையோ, மிகப்பலத்த மழையோ பெய்யலாம். சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 244 மணி நேரத்திற்கு வாகனம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கடலோர மாவட்டங்களில் ஆட்சியர்களின் உத்தரவின் பேரில், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மைக் மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் சென்ற மீனவர்களை கரை திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆர்.கே.நகரில் டிசம்பர் 5-ம் தேதி முதல் பிரசாரத்தை ஆரம்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்பட பலரும் திட்டமிட்டனர். அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழியும் என வானிலை மையம் எச்சரிக்கை செய்திருப்பதால் வருகிற 8 அல்லது 9-ம் தேதி வரை பிரசாரம் செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
சென்னையில் லேசாக மழை பொழிந்தாலும், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிற பகுதி ஆர்.கே.நகர். எனவே மழை பொழிந்து பாதிப்புக்குள்ளான நேரத்தில் அங்கு மக்களை எதிர்கொள்வதும் சிரமம். தவிர, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு வழக்கத்தைவிட குறைவான நாட்களே (13 நாட்கள்) இந்த முறை அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு அவகாசமாக இருக்கிறது. அந்த நாட்களையும் மழை தகர்த்துவிடுமோ என ஆர்.கே.நகரில் போட்டியிடும் கட்சிகள் அதிர்ந்து போயிருக்கின்றன.