தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.13) காலை 10 மணி வரை தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை (நவ.14) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவ.14, 15-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 - 33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“