பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிபந்தணை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது, சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அவரது வீட்டில் இருந்துவருகிறார்.
இந்நிலையில், திருத்தங்கலில் குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ். பி .வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் ,ஆர் .பி .உதயகுமார் மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் திடீரென வருகை தந்தனர்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் ராஜேந்திர பாலாஜியுடன் பணமோசடி வழக்கு குறித்தும், வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு 4 முன்னாள் அமைச்சர்களும் திடீரென நேரில் சென்ற சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா திருத்தங்கலில் உள்ள ராஜேந்திர பாலாஜி வீட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பங்கேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil