வேலூர் மாவட்டத்தில் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 2 ஆசிரியைகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே ராமாவரத்தை சேர்ந்த மாணவிகள் தீபா, சங்கரி, மனீஷா, ரேவதி. இவர்கள் பனப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர்கள் நேற்று (நவம்பர் 24) மாலையில் ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து பலியானார்கள்.
4 மாணவிகளின் தற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரே வகுப்பில் படிந்து வந்த 4 மாணவிகளும் நெருங்கிய தோழிகள். சில நாட்களுக்கு முன்பு தமிழ் ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது இவர்கள் 4 பேரும் மேலும் 2 மாணவிகளுடன் சேர்ந்து பாடத்தை கவனிக்காமல், சொந்தமாக பாடல் எழுதியுள்ளனர். அந்த பாட்டை, தமிழ் ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்களை கதாபாத்திரமாக கொண்டு எழுதியதாக கூறப்படுகிறது.
அந்த தமிழ் ஆசிரியர் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தார். தலைமை ஆசிரியை, 6 மாணவிகளையும் அழைத்து கண்டித்துள்ளார். ‘மறுநாள் பள்ளிக்கு வரும் போது, பெற்றோரை அழைத்து வர வேண்டும். பெற்றோருடன் வரவில்லையெனில் வகுப்பறைக்குள் செல்லக்கூடாது’ என்றும் எச்சரித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளை தவிர, மற்ற 2 மாணவிகளும் பெற்றோரை அழைத்து வந்து தலைமை ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த 4 மாணவிகள் பெற்றோரை அழைத்து வரவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கோபத்தில் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை 4 மாணவிகளையும் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த 4 மாணவிகளும், பள்ளியை விட்டு வெளியே சென்றனர். பிறகு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அவலூர் போலீசார் 4 மாணவிகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மாவட்ட எஸ்.பி. பகலவன் மற்றும் வருவாய் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ரமாமணி, தமிழ் ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோரை ‘சஸ்பெண்ட்’ செய்து கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து குற்ற நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.