தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 4 மனுக்கள் வியாழக்கிழமை (ஜூன் 15) விசாரணைக்கு வர உள்ளன. அதில், 3 மனுக்கள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அந்த மனுக்கள் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மற்றும் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பான மனுக்கள் ஆகும்.
தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவும் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“