சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் 4 வயது பெண் குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் மெக்கானிக் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 4 வயதாகும் பெண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு, அக்குழந்தையின் தாய், அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்புகையில், வீட்டின் கதவு திறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள்ளே சென்று மகளை தேடினார்.ஒவ்வொரு அறையாக தேடினார். குழந்தை காணவில்லை. பின் கணவரிடம் விசயத்தை கூறினார். அவரும் விரைந்து வந்து குழந்தையை தேடினார். அக்கம்பக்கத்துவீடுகளில் விசாரித்தனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. உடனடியாக திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.
போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடைசியாக இந்த வீட்டிற்கு வந்தவர்கள் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதேநேரத்தில், வீட்டின் பல இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், குளியலறை பகுதியில், ஒரு சாக்குப்பை கட்டியநிலையில் கிடந்தது. அதை திறந்து பார்த்ததில், அந்த பெண் குழந்தை சடலமாக கிடந்தாள். தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர். பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தை தனியாக இருந்த வீட்டினுள், அந்த அபார்ட்மெண்டின் மேல்மாடியில் குடியிருக்கும் நபர் சென்றதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூறிய தகவலின்அடிப்படையில், போலீசார் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.விசாரணையின் இறுதியிலேயே இதுபற்றிய முழுத்தகவலை தெரிவிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும், முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தையும், சிறுமியின் உடலை மறைக்க உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி ராஜம்மாளையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது கொலை, போக்சோ உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.