தமிழகத்தில் பச்சை முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், மதுரை நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (23), சுரேந்தர் (23), கணேஷ்ராஜா (23) மற்றும் பனங்காடியைச் சேர்ந்த ஜான் (23) ஆகிய 4 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், மயோனைஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ஷவர்மா போன்றவற்றை சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்ற நிலையில், அன்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட உணவகத்தில் உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.