/indian-express-tamil/media/media_files/2025/10/12/bjp-tamilagam-thalainimir-2025-10-12-11-15-22.jpg)
காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம்: அனுமதி வழங்க 42 கேள்விகளை எழுப்பியது போலீஸ்
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொள்ளவுள்ள பிரச்சார பயணத்துக்காக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸார் 42 கேள்விகளைக் கேட்டுள்ளனர். 'தமிழகம் தலைநிமிர் - தமிழனின் பயணம்' என்ற பெயரிலான இந்தப் பிரச்சார தொடர் இன்று (அக்.12) மதுரையில் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக, நயினார் நாகேந்திரன் நாளை (அக். 13) காரைக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
பயண விவரம்:
மதுரையிலிருந்து புறப்படும் நயினார் நாகேந்திரன், பிற்பகல் 2 மணிக்கு பிள்ளையார்பட்டியில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் வரவேற்பு பெறுகிறார். பின்னர், காரைக்குடியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மாலை 3.30 மணிக்கு தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
அனுமதி மற்றும் கேள்விகள்:
இந்தப் பிரச்சாரப் பயணத்துக்கான அனுமதி கோரி பா.ஜ.க. நிர்வாகிகள் காரைக்குடி போலீஸாரிடம் மனு அளித்தனர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் நயினார் நாகேந்திரனின் மீது மலர்தூவி வரவேற்பு அளிக்கவும் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில்கொண்டு காரைக்குடி போலீஸார் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் 42 கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
போலீஸார் எழுப்பிய கேள்விகளின் முக்கிய அம்சங்கள்:
கூட்டம் அதிகரித்தால் மேற்கொள்ளப்படும் மாற்று ஏற்பாடுகள் என்ன?
உணவு மற்றும் குடிநீர் வசதிகள்.
பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை.
வரவேற்பு வடிவம் மற்றும் வாகன நிறுத்தம் போன்ற விவரங்கள்.
பா.ஜ.க மற்றும் போலீஸ் தரப்பு கருத்து:
இதுகுறித்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் பாண்டித்துரை கூறுகையில், "போலீஸார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளித்து விட்டோம். அனுமதி வழங்குவதில் எவ்வித சிக்கலும் இருக்காது" என்று நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த போலீஸார், "நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பா.ஜனதா சார்பில் மதுரையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறோம். இதையொட்டி ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன். வருகிற தேர்தலின் மூலம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கள் கூட்டணியில் முக்கிய கட்சிகள் இணைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.