தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (நவ. 21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 23-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 43.8 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. தங்கச்சிமடத்தில் 33.8 செ.மீ, பாம்பன் - 28 செ.மீ, மண்டபம் - 27.1 செ.மீ , ராமநாதபுரம்- 12.5 செ.மீ , கடலாடி- 7.3 செ.மீ, வாலிநோக்கம்- 6.5 செ.மீ, கமுதி- 5 செ.மீ மழை பெய்தது.
அதே போல் இன்றும் (நவ.21) ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“