/indian-express-tamil/media/media_files/2025/10/27/minister-ganesan-labour-welfare-2025-10-27-18-58-20.jpg)
'நான் முதல்வன்' திட்டத்தில் 4,500 மாணவர்கள் பயிற்சி: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆயிரத்து 171 மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் பட்டங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் 4 ஆயிரத்து 500 மாணவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், இளநிலைப் பிரிவில் ஆயிரத்து 98 மாணவர்களுக்கும், முதுகலைப் பிரிவில் 73 மாணவர்களுக்கும் என மொத்தம் ஆயிரத்து 171 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். தற்போது, இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், வணிகவியல், இயற்பியல் உட்பட 13 பாடப்பிரிவுகளில் மொத்தம் 4 ஆயிரத்து 425 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றை அமைச்சர் கோவி. செழியன் எடுத்துரைத்தார். இக்கல்லூரி 1966-ம் ஆண்டு முதல்நிலை வகுப்புகளுடன் விருத்தாசலம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. 1969 கொளஞ்சியப்பர் கோயிலின் நன்கொடையுடன் இளங்கலை வரலாறு, இளங்கலை தமிழிலக்கியம் ஆகிய இரண்டு பட்ட வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1971-ம் ஆண்டு நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட இந்தக் கல்லூரிக்கு, பழமலைநாதர் திருக்கோயிலால் 435 ஏக்கர் நிலம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. 2005-ம் ஆண்டு B+ தரம் பெற்ற இக்கல்லூரி, 23.05.2014 முதல் முதல்நிலை (Grade-I) கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டு இக்கல்லூரி தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.
இக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுகின்றனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 691 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் 458 மாணவிகளும் உதவித்தொகை பெறுகின்றனர்.
கல்லூரிச் சின்னத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் தத்துவத்தையும் அமைச்சர் விளக்கினார். மாணவர்கள் கூர்மையான அறிவாற்றல் பெற வேண்டியதை வேல் குறிக்கிறது. உயர்ந்த மனப்பான்மை, தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி அடைய வேண்டியதை பழமலைநாதர் கோயில் குறிக்கிறது. மலர்: மென்மை, இனிமை, மணம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், யாழ்: இணக்கமாய் இருந்து இசைபட வாழ வேண்டும் என்பதையும் குறிக்கின்றன.
மாணவர்கள் "உழைப்பே தெய்வம்" என்று கருதிப் படிப்பில் கவனம் செலுத்தி உழைத்து உயர வேண்டும் என்பதே இச்சின்னத்தின் சாராம் சமாகும் என்று அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us