தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்கிய நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், 49 வயதான அமுதவல்லி என்பவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய மகளும் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் எம்.பி.பி.எஸ் பொதுக் கலந்தாய்வுக்காக காத்திருக்கிறார்.
பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை டாக்டராக்கி விட வேண்டும் என்ற கனவுடன், அவர்களை ஏதாவது ஒரு நீட் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டு, அவர்கள் படிப்பதற்கு தேவையான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து, படிக்கும்போது, டீ போட்டு கொடுத்து பிள்ளைகளுடன் சேர்ந்து அவர்களும் போராடுவார்கள். நீட் தேர்வில் தங்கள் பிள்ளைகள் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துவிட்டால் பிள்ளைகளை நல்ல வழி காட்டிவிட்டதாக நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள். இது வழக்கமான பெற்றோர்களின் கதை. ஆனால், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதவல்லியின் கதையோ முற்றிலும் வேறுபட்ட ஒரு சாதனைக் கதை.
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட் மதிப்பெண் அடிப்படையில் ஜூலை 30-ம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு கல்லூரிகளில் உள்ள 4,336 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 2,264 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,583 பி.டி.எஸ். இடங்களுக்கும் இந்த கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
சிறப்பு பிரிவில் விளையாட்டுப்பிரிவில் 7 இடங்களும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 11 இடங்களும் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதற்கு 56 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களும் இடங்களை தேர்வு செய்தார்கள்.
சிறப்பு பிரிவு கலந்தாய்வுக்கு வழக்கமாக தங்கள் பிள்ளைகளுக்கு உதவியாக தாய், தந்தை வருவார்கள். அப்படித்தான் கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்கள் இவர்களை நினைத்திருந்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு, தாய் கலந்தாய்வில் பங்கேற்று தான் படிக்க விரும்பும் மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தார். இந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆம், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான பிஸியோதெரபிஸ்ட் அமுதவல்லி எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் பங்கேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்து இடம் பிடித்துள்ளார். அவருக்கு உதவியாக வந்த அவருடைய மகள் சம்யுக்தா கிருபாளினி நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் எடுத்து எம்.பி.பி.எஸ் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்காக காத்திருக்கிறார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும், விண்ணப்பத்தில் பாதுகாவலர் என்ற இடத்தில் தாயார் அமுதவல்லிக்கு மகள் சம்யுக்தா கிருபாளினி கையொப்பம் போட்டுள்ளார். சம்யுக்தா கிருபாளினி மருத்துவப்படிப்பில் சேர்ந்தால் தாயும் மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்ற சாதனையாகவும் அமையும்.
நீட் தேர்வில் வயது வரம்பு இல்லாததால், மாற்றுத்திறனாளியான அமுதவல்லி தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அமுதவல்லி, நீட் தேர்வில் 147 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர், தனது சொந்த மாவட்டமான தென்காசிக்கு அருகிலுள்ள விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.
அமுதவல்லி தனது மகள் சம்யுக்தா, இந்த ஆண்டு நீட் தேர்விற்காகத் தயாரானதைப் பார்த்து, அவரும் நீட் தேர்வு எழுத ஊக்கம் பெற்று நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய சம்யுக்தா, இந்த முறை 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமுதவல்லி, தான் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 30 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முயற்சி செய்ததாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததால் பிசியோதெரபி படிப்பை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தனது மகள் நீட் தேர்வுக்காக இரண்டாவது முறை முயற்சியைப் பார்த்த அமுதவல்லி, மகளுடன் சேர்ந்து நீட் தேர்விற்குத் தயாராகி, தேர்வு எழுதினார்.
நீட் தேர்வில் வயது வரம்பு இல்லை அல்லது எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதாலாம் என்பதில் வரம்பு இல்லாததால், முப்பது வருடங்கள் தாமதமானாலும், அமுதவல்லி தனது எம்.பி.பி.எஸ் கனவை நனவாக்கி உள்ளார்.
தாய் அமுதவல்லிக்கும் மகள் சம்யுக்தா கிருபாளினிக்கும் இரையே ஒரு ஒப்பந்தம் என்னவென்றால், “நான் சேரும் அதே கல்லூரியில் நீ சேரக்கூடாது என்பது என் மகள் விதித்த ஒரே நிபந்தனை. ஐந்து ஆண்டுகளுக்கு அவளது மகிழ்ச்சியைக் கெடுக்கக் கூடாது என்று நினைக்கிறேன்” என்று அமுதவல்லி சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமுதவல்லி, “32 ஆண்டுகளுக்கு முன் நான் 12-ம் வகுப்பு முடித்தேன். அப்போது இருந்த பாடங்களை விட நீட் தேர்விற்கான பாடங்கள் கடினமாகவே உள்ளன. இருந்தாலும் மனம் தளராமல் தினமும் 10 மணி நேரம் ஆர்வத்துடன் படித்தேன். எனக்கு எழும் சந்தேகங்களை மகளிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். மகளின் வழிகாட்டுதலில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நீட் தேர்வில் நான் 147 மதிப்பெண்கள் எடுத்தேன். எனது மகள் சம்யுக்தா கிருபாளினி 460 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது . நான் பிசியோதெரபி படிப்பதற்கு முன்னரே எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அது 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறி உள்ளது.” என்று கூறினார்.
தனது தாய் அமுதவல்லி கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்திருப்பது குறித்து மகள் சம்யுக்தா கிருபாளினி கூறுகையில், “நீட் தேர்வில் உதவியது போல் எனது தாயார் அமுதவல்லிக்கு எம்.பி.பி.எஸ் படிப்பிலும் உதவுவேன். பாடங்களில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பேன். அவரையும் படிக்க வைத்து நானும் படிப்பேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.