ஐந்து ஆண்டுகளில் சென்னையில் 497 புள்ளி மான்கள் உயிரிழப்பு – தமிழக வனத்துறை

பிளாஸ்டிக்கை உண்டதாலும், நாய்கள் கடித்தது போன்ற காரணங்களால் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளதாக தமிழக வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய…

By: November 5, 2019, 8:26:37 PM

பிளாஸ்டிக்கை உண்டதாலும், நாய்கள் கடித்தது போன்ற காரணங்களால் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளதாக தமிழக வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் 1500 மான்கள் உள்ளன.

இந்த மான்களை பிடிக்கவும்,வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் வனத்துறைக்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு தமிழக வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று வனத்துறையின் முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சென்னையில் ராஜ்பவன், ஐ ஐடி வளாகம்,மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகம் ஆகியவை புள்ளிமான்கள் போன்ற வனவிலங்குகள் வாழ தகுதியான இயற்கை சூழல்களாக இருந்து வந்தது .

இந்த வளாகங்களில் மனிதர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் காரணமாக இந்த இடங்களை விட்டு மான்கள் வெளியேறும் சூழல் உருவானது.

இவ்வாறு வனப்பகுதியை விட்டு மான்கள் வெளியே வரும் போது, நாய்கள் கடித்து விடுவதாலும், உணவுகளை உண்ணும் போது பிளாஸ்டிக் பைகளை விழுங்கியும், கழிவுநீரை அருந்தியதன் காரணமாகவும், வாகனங்கள் மோதியும், மான்கள் இறப்பது அதிகரித்து வந்தது.

குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு தரமணியில் 9 புள்ளி மான்கள் இறந்தது. அதன் உடலை பரிசோதித்ததில் பிளாஸ்டிக் பைகளை செரிக்காமல் மான்களின் வயிற்றில் இருந்தது தெரியவந்தது.

இதே போல் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், இந்தாண்டில் வாகனம் மோதியும், பிளாஸ்டிக் உண்டதாலும் 2 மான்கள் உயிரிழந்துள்ளது.

மேலும் மத்திய தோல் ஆராச்சி நிறுவன வளாகத்தில் 32 புள்ளி மான்களும், சென்னை ஐ ஐ டியில் 316 புள்ளி மான்கள் என கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் சுமார் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளது.

அதிலும் ஐ ஐ டி வளாகத்தில் உயிரிழந்த மான்களை உடற்கூறு ஆராய்வு செய்த போது, மான்களின் வயிற்றுப்பகுதியில் இருந்து 4 முதல் 6 கிலோ வரையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு சென்னையில் உள்ள ஐஐடி, தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற இடங்கள் புள்ளி மான்கள் வாழ தகுதியற்ற இடங்களாக மாறியுள்ளதை கருத்தில் கொண்டே வனத்துறை மான்களை வேறு இடங்களுக்கு மாற்றி வருகிறது.

கடந்த 2011 -12 ம் ஆண்டுகளில் மெட்ரோ பணிகளுக்காக சென்னை நந்தனத்தில் உள்ள கோழிகள் வளர்ப்பு ஆராய்ச்சி மைய வளாகத்தில் இருந்த 42 புள்ளி மான்கள் கிண்டி உயிரியல் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்தது.

2014-15 ம் ஆண்டுகளில் சென்னையின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த 323 புள்ளிமான்களை பிடித்து கிண்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்தது.

கடந்த 2018 ம் ஆண்டு தரமணி பகுதியில் சுற்றி திரிந்த 39 மான்கள் பாதுகாப்பாக எந்த காயங்களும் இன்றி பிடிக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

இத்தகைய இடமாற்ற நடவடிக்கையால் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 32 மான்கள் உயிரிழந்த நிலையில் இந்தாண்டு 2 மான்கள் மட்டுமே உயிரிழந்துள்ளது.

நகர வளர்ச்சி, வனப்பகுதி இல்லாத இடங்களில் கட்டுமானப்பணிகள் காரணமாக ஆண்டுதோறும் 100 மான்கள் இறந்து வரும் நிலையில் அவை வாழ தகுந்த சூழலுக்கு இடமாற்றுவது மிக அவசியமானது என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இடமாற்றம் செய்வதால் மான்கள் இறப்பதாக தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுப்படி செய்ய வேண்டும் எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:497 deer in chennai died tn forest department reports

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X