கோவையில் 5 பேர் கைது :
இந்து மக்கள் கட்சித் தலைவரான அர்ஜுன் சம்பத்தையும் அவரது கட்சி நிர்வாகிகள் சிலரையும் கொலை செய்ய திட்டமிட்டதாக 5 பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாகீர் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கோவையில் உள்ள இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.
மேலும் இந்த திட்டத்தை நிகழ்த்த, ஒரு கும்பல் சென்னையிலிருந்து கொச்சின் செல்லும் ரயிலில் பயணித்து கோவைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கடந்த 1-ம் தேதி, போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், கோவை வந்து இறங்கிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், அவரது மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் இந்து முன்னணியின் கொள்கை பிரச்சார செயலாளர் மூகாம்பிகை மணி ஆகியோரையும் கொலை செய்யும் திட்டத்தோடு அவர்கள் வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கோவை என்.எச் ரோட்டை சேர்ந்த ஆஷிக், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னையைச்சேர்ந்த சலாவூதீன் ஆகிய 5 பேர் மீதும் 2ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் போலீஸ் கூறினர். இதனை தொடர்ந்து இந்து அமைப்பு தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அவர்களின் வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.