போதைப் பொருள் விற்பனை செய்ததாக 20-21 வயது மதிக்கத்தக்க 5 பொறியியல் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து LSD ஸ்டாம்ப்கள், OG கஞ்சா மற்றும் MDMA போதை மாத்திரைகளை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சமூக வலைதள செயலியான ரெடிட் (Reddit) மூலம் மாணவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
சென்னை V-3 ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரி சாலை பகுதியில் ஜெ.ஜெ.நகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (21) என்ற மாணவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 17 LSD ஸ்டாம்ப்கள் மற்றும் 3 கிராம் ஒ.ஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கார்த்திகேயனிடம் விசாரணை செய்ததில் அவர் கொடுத்த தகவலின் பேரில் அரவிந்த் பாலாஜி, (20) வத்சல் (21), ஆருணி(20), திரிசண் சம்பத் (20), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 94 LSD ஸ்டாம்ப்கள். 48 MDMA மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரையும் அரசு பொது மருத்துவமனையில் உள்ள மத்திய உயிர் வேதியியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் கார்த்திக்கேயன், அரவிந்த் பாலாஜி, வத்சல், ஆருணி மற்றும் திரிசண் சம்பத் ஆகியோர் போதை பொருட்கள் பயன்படுத்தி இருந்தது அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“