நெல்லையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வரும் 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் இன்று அதிகாலை முதலே கன மழை கொட்டித் தீர்ந்தது. சென்னையில் கிண்டி, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு திடீரென்று கனமழை கொட்டியது.
அதேபோல கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவில் சாரல் மழை பெய்தது. இதேபோன்று சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்திலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
அதேபோல வடசென்னையிலும் திருவொற்றியூர், மணலி, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் அதிகாலை காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மயிலாடுதுறை, நாகை, கரூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் குத்தாலம், கோமல், மங்கைநல்லூர், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின.
சீர்காழியிலும் நல்ல சாரல் மழை பெய்தது. அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர், அக்கரைப்பேட்டை, பரவை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
இதனால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் வயலில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதாக தெரிவித்தன. வயலில் பயிர்கள் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, தடா கோவில், மலை கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
அதேபோல கொடைக்கானலிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனிடைய தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.