சென்னை பெருங்களத்தூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் இருந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று (செப்டம்பர் 4) இரவு நடந்த இந்த கோர விபத்து பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் இன்று (செப்டம்பர் 5) திங்கள்கிழமை வேலைக்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளனர்.
சென்னை வந்த இந்த 5 இளைஞர்களும் நண்பர்களுடன் தி.நகரில் பொருட்களை வாங்கிக்கொண்டு, நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். மேலும், உடன் இருந்த நண்பர்களிடம் வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வருவதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
மேட்டூரைச் சேர்ந்த நவீன் என்பவர் சொகுசு காரை ஓட்ட இளைஞர்கள் காரில் சென்றுள்ளனர். அவர்களின் கார் பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே அடையாள தெரியாத வாகனம் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய சொகுசு கார், அங்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. .
கார் வேகமாக சென்று மோதியதால் லாரிக்கு அடியில் சிக்கி கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த 5 பேரின் உடலைகளை தாம்பரம் தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர். இதையடுத்து, பலியான 5 பேரின் உடலையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை பெருங்களத்தூர் அருகே தாம்பரம் - திருச்சி சாலையில் நடந்த இந்த கோர விபத்தில் காரில் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த இளைஞர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"