பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (15.01.2023) கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியக் கூடியவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கக்கூடிய திருச்சியிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பேருந்து பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சி மாநகரில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் செல்வதற்காக ஏராளமான பயணிகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்தவாறு உள்ளனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை திருச்சி சோனா - மீனா திரையரங்கு எதிரே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்தனர்.
இந்தத் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போதிய பேருந்து இல்லாததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்ததாகக்கூறி அதிகாலை 500-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த கண்டோண்மெண்ட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அருகில் இருந்த போக்குவரத்து பணிமனையில் இருந்து கூடுதலாக பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சியில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என தெரிவித்த நிலையில், போதிய பேருந்து வசதி இல்லை எனக் கூறி அதிகாலையில் பயணிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (14.01.2023) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக 784 பேருந்துகளும், 463 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த (12.01.2023 முதல் 14.01.2023) இன்று நண்பகல் 12.00 மணி வரையில் மொத்தம் 8,043 பேருந்துகளில் 4,66,494 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும், இதுவரை 1,95,015 பயணிகள் முன்பதிவு செய்து இன்று பயணம் செய்யவிருக்கின்றனர் என்கிற தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/