திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர் - சங்கர் கோயிலில் மாசிபெறு திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான வேடபறி வைபவம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்க நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் 1 குழந்தை உள்பட 7 பேர் காரில் சென்றுள்ளனர். ரவி என்பவரது மனைவி கவிதா காரை ஓட்டிச்சென்று சென்றுள்ளார். அவருடன் கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, சுதா, கவிதா தம்பியின் 4 வயது மகள் லக்சனா ஆகியோர் காரில் சென்றுள்ளனர். காரில் சென்ற 7 பேரும் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் மீண்டும் திருச்செங்கோடு திரும்பியுள்ளனர்.
பரமத்தி வேலூர் அருகே சென்ற போது சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி, மற்றொருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவிதாவின் தம்பி மகள் 4 வயது குழந்தை லக்சனா மற்றும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் அங்கு மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்