திருச்சி அருகே, 5 வயது சிறுமி மரணமடைந்தது தொடர்பாக, தாய் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இரண்டாவது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி, காட்டுப்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் நித்தியகமலா. இவர் கணவர் முத்துப்பாண்டியன் மற்றும் 5 வயது மகள் லத்திகா ஸ்ரீ உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், லத்திகாஸ்ரீ படிக்காமல், டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த நித்தியகமலா, மகளை அடித்துள்ளார். லத்திகாஸ்ரீ மயக்கமடைந்தாள். உடனடியாக, சிகிச்சைக்காக ,நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி லத்திகா ஸ்ரீ மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, காட்டுப்புத்தூர் போலீசார், நித்தியகமலத்தை கைது செய்தனர்.
விசாரணையில் திடுக் : நித்தியகமலத்திற்கும், தேனியை சேர்ந்த பிரசன்னாவிற்கு திருமணம் நடைபெற்றிருந்தது. இவர்களுக்கு பிறந்தவள் தான் லத்திகா ஸ்ரீ. கருத்து வேறுபாடு காரணமாக, நித்தியகமலம், பிரசன்னாவிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். இதனிடையே, நித்தியகமலம், முத்துப்பாண்டியனை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.
சம்பவத்தன்று, முத்துப்பாண்டியன் தான் லத்திகா ஸ்ரீயை அடித்ததாகவும், கணவரை காப்பாற்ற நித்தியகமலம், தான் அடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக, போலீசார், முத்துப்பாண்டியனின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.