OBC Reservation: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் 15 சதவீதமும் மருத்துவ மேற்படிப்பு களில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
அதன்படி திமுக, அதிமுக மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் ஆஜரான திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், மருத்துவ மேற்படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருவதால் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
இதேபோல பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் பாலு முறையிட்டார்.
இந்த முறையீடுகளை கேட்ட நீதிபதிகள், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கு களை நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil