/indian-express-tamil/media/media_files/2025/08/31/lost-gold-ornaments-on-train-2025-08-31-12-42-58.jpg)
ரயிலில் தவறவிட்ட 50 பவுன் நகைகள்... பாதுகாப்பாக உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்!
சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணித்த பயணி ஒருவர், தனது 50 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் செல்போன் அடங்கிய பையை ரயிலில் மறந்துவிட்டுச் சென்ற நிலையில், ரயில்வே போலீசார் அதை மீட்டு உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
கோவை சாரதா மில் ரோடு, முத்தையா நகரைச் சேர்ந்த ரவிக்குமார் (53) என்பவர், தனது மனைவி மற்றும் மகளுடன் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம் செய்தார். கோவை ரயில் நிலையம் வந்ததும், ரயிலை விட்டு இறங்கிய அவர்கள் அவசரமாக வெளியே சென்றனர். அப்போது, தங்களுடன் கொண்டு வந்த ஒரு கைப்பையை ரயில் பெட்டியிலேயே மறந்துவிட்டனர்.
இந்த சமயத்தில், பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் மணிகண்டன், ரயில் பெட்டிகளைச் சோதனையிட்டபோது, உரிமையாளர் இல்லாத ஒரு பையைக் கண்டார். பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் 50 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் ஒரு செல்போன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, பையை ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார்.
மறுபுறம், வீட்டிற்குச் சென்ற ரவிக்குமார் தனது பை காணாமல் போனதை உணர்ந்து, உடனடியாக கோவை ரயில் நிலையத்திற்குத் திரும்பினார். அப்போது, ரயில்வே அலுவலகத்தில் இருந்த அவரது செல்போன் ஒலித்தது. அந்தப் போன் அழைப்பு மூலம், தனது பை தொலைந்துவிட்டதாக ரவிக்குமார் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ரவிக்குமாரின் அடையாளங்கள் மற்றும் பை குறித்த தகவல்களை உறுதி செய்த பின்னர், போலீசார் அவரிடம் பையை ஒப்படைத்தனர். பையில் இருந்த 50 பவுன் நகைகள், பணம் மற்றும் செல்போன் அனைத்தும் பத்திரமாக இருந்தன. ரவிக்குமார், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். ரயில்வே போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தொலைந்த விலைமதிப்பற்ற பொருட்களை மீட்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தச் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.