Advertisment

அண்ணா மீது ஆணையாக எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்: கோவையில் ஸ்டாலின் உறுதி

70% அதிகமான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது, மற்ற வாக்குறுதிகளும் அண்ணா மீது ஆணையாக நிறைவேற்றப்படும் என நேற்று கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
அண்ணா மீது ஆணையாக எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்: கோவையில் ஸ்டாலின் உறுதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் நேற்று(ஆகஸ்ட் 24) திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, தேதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணிச் செயலாளர் மைதிலி உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களை, மாற்றான்தாய் மனப்பான்மை என நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என நினைக்கின்றேன். சேர வேண்டிய இடத்திற்கு வந்து உள்ளீர்கள். உங்களது முக மலர்ச்சி எனது மன மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு செயலில் இறங்கினால், அது பாராட்டுக்குரிய செயலாக இருக்கும். இன்னும் பலரும் இந்த இயக்கத்தை நோக்கி வர தயாராக காத்திருக்கிறார்கள்.

publive-image

50 ஆயிரம் பேரின் பட்டியல் உள்ளது

மாற்றுக்கட்சியினர் 50 ஆயிரம் பேர் இணைகிறார்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜி வெறுமனே கணக்கு காட்டவில்லை. 50 ஆயிரம் பேரின் பட்டியலை ஆதாரத்துடன் என்னிடம் தந்தார். எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம் என நினைப்பவர் செந்தில் பாலாஜி. ஆச்சிப்பட்டி எனக்கு ஆச்சரியப்பட்டியாக காட்சியளிக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் திமுகவின் கொள்கைகளை, நமது கொள்கைகளை கொண்டு செயல்பட்டு வருகிறோம். திமுக கட்சி தொடங்கி 19 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது. சிலர் கட்சி தொடங்கியதும் அடுத்த ஆட்சி எனது என்கின்றனர். சிலர் கட்சி தொடங்கும் முன்பே அடுத்த முதலமைச்சர் என்கின்றனர்.
நம்மைப் போல வெற்றி, தோல்வி பெற்ற கட்சி நாட்டில் இருக்க முடியாது. நாம் அடையாத புகழும், அவமானமும், சாதனையும், வேதனையும் இல்லை. 70 ஆண்டுகள் கடந்தும் கட்சி நீடிக்க காரணம் நாம் கொள்கைக்காரர்கள் என்பது தான். அக்கொள்கைக்காக உயிரையும் தர தயாராக இருக்கிறோம். அண்ணா, கருணாநிதியால் வளர்க்கப்பட்ட கட்சி.

publive-image

திமுக கொள்கை கோட்டை

இது அரசியல் கட்சி மட்டுமல்ல. கொள்கை கோட்டை. இங்கு கட்சிக்காரராக அல்லாமல் கொள்கைக்காரர்களாக செயல்பட வேண்டும். திராவிடம் என்பது சமூக நீதி, சம நீதி, இன உரிமை, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம். திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கை கொண்டது. திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எந்த ஆட்சியும் செய்யாத, நாட்டில் எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளை திமுக செய்து வருகிறது" எனக்கூறிய அவர், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசின் சாதனைகளை பார்த்து பலருக்கு மகிழ்ச்சி. சிலருக்கு அதிர்ச்சி. இந்தளவு சிறப்பாக ஆட்சி நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை என பலர் என்னிடம் சொல்கின்றனர். நான் சொல்லி செய்பவன் அல்ல. சொல்லாமல் செய்பவன். 70 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மற்ற வாக்குறுதிகளும் அண்ணா மீது ஆணையாக நிறைவேற்றப்படும்.

publive-image

பழிச்சொல், இழிச்சொல்லுக்கு பதிலளிக்க நேரமில்லை

தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். எதிர்க்கட்சிகள் பழிச்சொல்லுக்கும், இழிச்சொல்லுக்கும் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. அந்த தலைவர்களை நான் விமர்சிக்க போவதில்லை. மக்களுக்காக பாடுபட்டு மக்கள் பாராட்டு பெற வேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் பணிக்கு தயாராகி கொள்ளுங்கள். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் கட்சி கொள்கை, லட்சியம், வரலாறு தெரிந்து கொள்ளுங்கள். கருப்பு, சிவப்பு மனிதராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். ஆட்சிக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இணைந்து பணியாற்ற 55 ஆயிரம் பேரை அமைச்சர் செந்தில் பாலாஜி இணைந்துள்ளது கட்சியின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு" எனத் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Stalin Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment