சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கையை வழங்க கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் போது திமுக-வின் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சுப்பையா தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, திருப்பூர் மாவட்டத்தில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.
இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்காத நிலையில், அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கியின் பணம் என்றும், ரிசர்வ் வங்கி அனுமதியுடன் கோவையிலுருந்து விசாகப்பட்டினத்துக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டதால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்புத் துறை செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வங்கிகளுக்கு இடையே பணபரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகளை மீறும் வகையில் இரவிலும், புகைவண்டிக்கு பதிலாக லாரிகளிலும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும், சமூக விரோத செயலுக்காக கொண்டு செல்லப்பட்ட பணமாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, மனுதாரர் 570 கோடி பிடிபட்டது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதுகுறித்து சிபிஐ விசாரித்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்து விசாரணையை நிறைவு செய்த சிபிஐ தரப்பு தனது அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தரப்பு முதல் கட்ட விசாரணையில் பணம் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக லாரிகளில் கொண்டு வரப்பட்ட பணம் வங்கிப் பணம் தான் என்று சிபிஐ தெரிவித்து இருப்பது தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிபிஐ விசாரணை அறிக்கையின் நகல் வழங்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், ஆஜராகி முறையிட்டார், அதில் தேர்தலின் பொது பிடிபட்ட பணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அது தொடர்பான அறிக்கையை மனுதரார்க்கு வழங்க வேண்டும் என முறையிட்டார்.
அப்போது நீதிபதி, இது தொடர்பான வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடுவதாகவும், அப்போது உங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.