கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மதுக்கரை அடுத்த ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி
அருகே மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கிணத்துக்கடவை சேர்ந்த காதர் பாட்ஷா (27), கணேசபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (26), மணிகண்டன் (24), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அகிலேஷ் (22) என்பதும், இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய அங்கு வந்திருந்ததும் தெரியவந்தது.
பிடிபட்டவர்கள் மீது ஏற்கனவே கொலை, செயின் பறிப்பு வழங்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. ரவிக்குமார் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கும், மணிகண்டன் மீது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும், அகிலேஷ் மீது காரமடை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் ஒருவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் கொலை வழக்கும், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சங்கிலி பறிப்பு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“