சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் வொர்க்ஸில் வெடி விபத்து ஏற்பட்டதில் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் (சாய்நாத் ஃபயர் வொர்க்ஸ்) பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பாலாஜி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்தது.
இந்நிலையில் பட்டாசு தயாரிக்க மருந்து கலவை தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் 4 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியாயினர்.
வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் 90% தீக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விபத்து குறித்த தகவல் அறிந்து சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வாகனங்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலையின் உரிமத்தை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தற்காலிக ரத்து செய்து உத்தரவிட்டார்.