இரண்டு லாரிகளிடையே சிக்கி டாட்டா ஏஸ் வாகனம் கோர விபத்து: 6 பேர் பலி, 5 பேர் படுகாயம் | Indian Express Tamil

இரண்டு லாரிகளிடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் கோர விபத்து: 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்

மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு லாரிகளிடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் கோர விபத்து: 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்
தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனம் (மினி வேன்) இன்று (டிசம்பர் 7) அதிகாலை சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஜானகிபுரம் என்ற இடத்தில் வந்த வாகனம் திடீரென முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனமும் கட்டுப்பாட்டை இழந்து டாடா ஏஸ் மீது மோதியது. இதில் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் நொறுங்கியது. டாடா ஏஸ்ஸில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அனைவரும் திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர் என்பதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 6 killed in mini van lorry collision near chegalpattus madhuranthagam