உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை:
தீபாவளி என்றாலே பட்டாசு தான். நேரம் காலம் பார்க்காமல், காலை முதல் இரவு வரை ரோட்டிலியே தவம் போல் நின்று பட்டாசு வெடித்த காலங்களும் உண்டு. ஆனால் இன்று எந்த் நேரத்தில் பட்டாசை வெடிக்க வேண்டும்? என்ன பட்டாசுக்களை வெடிக்க வேண்டும்? என்று ஒரு நீள பட்டியலை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
பட்டாசு குறித்து தீர்ப்பை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் வரவேற்றாலும், பட்டாசு என்றால் வெடிப்பதற்கு என மட்டுமே தெரிந்த குழந்தைகள் புலம்பி தள்ளுகின்றனர். அவர்களிடம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விவரிக்க பெற்றோர்கள் ஒருபக்கம் பாடாய் படுகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் விதிகளை கடைபிடிப்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 500 கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அந்த அந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.