ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு வழக்குகளில் முன் ஜாமீன் கோரி கே.டி.ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
அதில், தங்களுக்கு எதிராகப் புகாா் அளித்த விஜய் நல்லதம்பி மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகப் பல புகாா்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளித்த பொய்ப் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 6 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருவதால், ராஜேந்திர பாலாஜி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அவர் பெங்களூருவில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil