திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு வசதி செய்யப்பட்டு பொதுமக்களிடம் திருடுபவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சாதாரண உடையில் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படியான நபர்களை பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக மாவட்ட காவல் அலுவலக உதவி மையத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு 9487464651 தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 44 இருச்சக்கர ரோந்து வாகனங்கள், 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றால் மேற்கண்ட எண்ணிற்கு தகவல் அனுப்பி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 24 ஆய்வாளர்கள் 45 உதவி ஆய்வாளர்கள் 500 சட்டம்-ஒழுங்கு காவலர்கள் மற்றும் 50 ஆயுதப்படை காவலர்களை நியமித்து தீவிர கண்காணிப்பில் மாவட்டம் முழுவதும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பண்டிகை முன்னிட்டு மாவட்டத்தில் போக்குவரத்து சீர்படுத்த 100 போக்குவரத்து காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
பட்டாசுகளை அரசு அறிவுறுத்திய நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பிடியாணை நிலுவையில் உள்ள குற்றவாளிகள், முன் வழக்குகளில் பிடிபடாத குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்ட எல்லைகளான துவரங்குறிச்சி, மோர்னிமலை மற்றும் நவல்பட்டு காவல் நிலையத்துக்குட்பட்ட மாத்தூர் ரவுண்டானா ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு குரு பூஜைக்கு செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“