தமிழகத்தில் ஜூலை 16-ம் தேதி மட்டும் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் யார் யார் எந்த துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து முழுவிவரம் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சிட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர் மதுமதி, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபால், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
தொழில்நுட்பக்கல்வி ஆணையர் வீரராகவ ராவ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறையின் முதன்மைச் செயலாளர் அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயலாளர் வி.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய தலைமை செயல் அதிகாரி சுரேஷ்குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
ஈரோடு துணை கலெக்டர் (மேம்பாடு) நாரணவரே மனிஷ் சங்கர்ராவ், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் விஜயாராணி, சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக (கல்வி) இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.
திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் (மேம்பாடு) ரிஷப், நிதித்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், பொதுத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி சுவர்ணா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஸ்ரவன்குமார் ஜடாவத், வீட்டுவசதி மற்று நகர்ப்புற வளர்ச்சித்துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் இயக்குனர் சந்திரகலா, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
ஈரோடு வணிகவரிகள் இணை கமிஷனர் லட்சுமி பாவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக முன்னாள் செயல் இயக்குனர் பிரியங்கா, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
சிப்காட் நிறுவன செயல் இயக்குனர் ஆகாஷ், நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை வணிகவரிகள் இணை கமிஷனர் (நிர்வாகம்) ரத்தினசாமி, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை துணை செயலாளர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் கமிஷனர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
நகராட்சி நிர்வாக இணை கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆஷிஸ்குமார், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் உறைவிட ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நல ஆணையரும், தமிழ்நாடு மீன்வள வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சுச்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டார்.
போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம், கைத்தறி இயக்குனராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவர் நல இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மீன்வள வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூகநலன் கூடுதல் இயக்குனர் கார்த்திகா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு அதிகாரி மோகன், சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் ஜெயகாந்தன், ஜவுளிகள் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஈரோடு வணிக வரிகள் இணை கமிஷனராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் சீதாலட்சுமி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனர் அமிர்த ஜோதி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிலையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் மகேஸ்வரி ரவிக்குமார், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சமூக சீர்திருத்தத் துறை முன்னாள் செயலாளர் ஆபிரகாம், தொழில்நுட்பக் கல்வி ஆணையராக மாற்றப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இந்துசமய அறநிலைய துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்துசமய அறநிலையங்கள் துறை ஆணையர் முரளிதரன், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையராக மாற்றப்பட்டார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார முறை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு சுகாதார முறை திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மின்னாளுமை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) சரண்யா அரி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டார்.
இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர், நில சீர்திருத்த இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நில வரிகள் இயக்குனராகவும் பணியாற்றுவார்.
கலை மற்றும் கலாசார இணை இயக்குனர் சிவ சுந்தரவல்லி, தொழில் மற்றும் வணிக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி மோகனசந்திரன், பேரிடர் மேலாண்மை இயக்குனராக பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்கள் இயக்குனர் சுகுமார், இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை ஆணையர், பொற்கொடி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இணை மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
உயர்கல்வித்துறை முன்னாள் முதன்மை செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் பி.சங்கர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
குறு, சிறு, நடுத்தர தொழில் துறை சிறப்பு செயலாளர் பி.மகேஸ்வரி, தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இட மாற்றம் செய்யப்பட்டார்.
பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன், தமிழ்நாடு சாலைப் பிரிவு திட்டம்-2-ன் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் சென்னை-கன்னியாகுமரி தொழில்வழிச்சாலை திட்ட இயக்குனராகவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அலுவல் சாரா மேலாண்மை இயக்குனராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டாளர் அஜய் யாதவ், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கண்ணன், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தர்மபுரி முன்னாள் கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, எல்காட் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
ஜவுளிகள் ஆணையர் வள்ளலார், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.