பெட்ரோல் பங்க்குகளை போல் 650 சார்ஜிங் ஸ்டேஷன்கள் – தமிழகத்தில் வேகம் எடுக்கும் இ-கார்கள் பயன்பாடு

சென்னையில் இருந்து நாக்பூர், புவனேஸ்வர் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த ஸ்டேஷன்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tech news, tamil nadu news, E cars, Clean Energy

650 EV Charging Stations to come up in Tamil Nadu : காலநிலை மாற்றம் காரணமாக எரிசக்தி பயன்பாட்டில் மாற்று சக்தியை நுழைக்கும் திட்டம் சமீப காலங்களில் மிகவும் அதிகமாகி வருகிறது. படிம எரிபொருள்களான கச்சாப் பொருட்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்தெடுப்பது மற்றும் இந்த எரிபொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடு அளவு சமீப காலங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை பெரும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது. உலக நாடுகள் இதில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் பல்வேறு கார் தயாரிக்கும் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் உற்பத்தியை அடுத்த சில தசாப்தங்களில் நிறூத்திவிடுவதாக அறிவித்தும் உள்ளனர்.

இந்த கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 45,300 எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனாலும் பொதுவெளியில் கார்களை சார்ஜ் செய்வதற்கான மையங்கள் இல்லாமல் இருப்பது இந்த பயனர்களுக்கு கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக பயன்படுத்தும் 7வது மாநிலமான தமிழகத்திற்கு 650 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் வர உள்ளது. சென்னையில் இருந்து நாக்பூர், புவனேஸ்வர் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த ஸ்டேஷன்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இ-கார்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள FAME (Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிதி மூலமாக ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் கூட பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்படவில்லை. தற்போது தான் இந்த திட்டத்தின் கீழ் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த துறையில் நிரப்படாமல் இருக்கும் இடைவெளியை சரியாக தனியார் நிறுவனங்கள் கவனிக்கவில்லை. அரசு இதில் முன்னேறி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் திட்ட உதவியாளர் அபினவ் சோமன் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

”இந்த சார்ஜிங் வலைப்பின்னல்கள் மெதுவாக ஆரம்பித்தாலும் விரைவில் வேகம் எடுக்கும் என்று நம்புகிறோம். ஆனாலும் இவ்வளவு சார்ஜர்களை வைக்கும் அளவிற்கு பயன்பாடு உள்ளதா என்பதும் கேள்விக்குறிதான்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து வகையான கார்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் செட்-அப் இருக்கும் போதே இது சாத்தியமாகிறது. தற்போது ஓலா, அதேர் மற்றும் பவுன்ஸ் போன்ற நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்களின் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்கின்றனர். அனைத்து வகையான கார்களுக்கும் இந்த சார்ஜிங் ஸ்டேஷன் பொருத்தமான தீர்வாக இருக்குமா என்று தெரியவில்லை என சென்னையை சேர்ந்த இ-கார்களை உருவாக்கும் நபர் கூறியுள்ளார்.

மற்றொரு பெரும் பிரச்சனை என்னவென்றால் சார்ஜ் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம். சராசரியாக 4 முதல் 8 மணி நேரம் வரை ஒரு எலெக்ட்ரிக் கார் சார்ஜ் ஆகும். ஆனால் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது 20 நிமிடங்களில் ஒரு காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்றும் துறைசார் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 650 ev charging stations to come up in tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com