கல்லூரியில் படித்து பட்டம் பெற வேண்டும் என 18 வயதில் கனவு கண்ட மூதாட்டி செல்லத்தாய், 67 வயதில் அதனை சாதித்துள்ளார். கல்விக்கு வயது தடையில்லை என்பதையும் அவர் நிருபித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 16 ஆயிரத்து 897 மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பட்டயம் வழங்கினார். பட்டம் பெற்ற மாணவிகளில் செல்லதாய் என்ற 67 வயது மூதாட்டியும் ஒருவர். அவர் கவர்னர் கையால் பட்டம் பெற்ற பின்னர் மேடையை விட்டு, படியில் இறங்கி வந்த போது அவரை சிலர் பிடித்து அழைத்து வந்து ஒரு இருக்கையில் உட்கார வைத்தனர்.
செல்லத்தாய் சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் ஏழாவது தெருவில் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரை திருமணம் செய்த பின்னர் சென்னைக்கு வந்துள்ளார். சிவில் சப்ளைஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் கோபாலபுரம் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த அவர், 2009ம் ஆண்டு ஒய்வு பெற்றார்.
எம்.ஏ. பட்டம் பெற்ற அவரிடம் பேசிய போது, ‘சின்ன வயதில் எனக்கு கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை. பத்தாம் வகுப்பு முடிந்ததும், ராணிமேரி கல்லூரியில் படிக்க விண்ணப்பம் வாங்கினேன். அந்த காலத்தில் பெண்கள் படிக்க அனுப்ப மாட்டார்கள். என் தந்தையும் என்னை படிக்க வைக்க மறுத்துவிட்டார். நான் வாங்கி வைத்திருந்த விண்ணப்பத்தையும் கிழித்து எரிந்துவிட்டார்.
திருமணத்துக்குப் பின்னர் சென்னை வந்துவிட்டேன். என் கணவரும் நான் படிக்க சம்மதிக்கவில்லை. சிவில் சப்ளை கார்பரேஷனில் பணியாற்றினேன். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். அவர்கள் மூவரையும் முதுகலை படிக்க வைத்துவிட்டேன்.
பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னரும் எனக்கு படிப்பு மீதான ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. இதை வீட்டில் சொன்னதும், கணவரும் மகள்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்குத் தெரியாமல் பிஏ படிக்க திறந்த நிலை பல்கலை கழகத்தில் விண்ணப்பித்தேன். குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பின்னர் நான் மட்டும் தனியாக உட்கார்ந்து படிப்பேன்.
என் கணவர் 2014ம் ஆண்டு இறந்துவிட்டார். இருந்தாலும் நான் படிப்பை கைவிட வில்லை. இது என் மகள்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலக கோயிலுக்கு வந்துவிடுவேன். அங்கு சில உதவிகளை செய்வேன். அங்கிருந்து சைதாப்பேட்டையில் உள்ள திறந்த நிலை பல்கலை கழகத்துக்கு சென்றுவிடுவேன். மாலை வரையில் அங்கேயே இருந்து படிப்பேன். வெயில், மழை எதைப்பற்றியும் நான் கவலைப்பட்டதில்லை.
படிப்பதற்கு வயது தடையாக இருக்கக் கூடாது. பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். எம்.ஏ. வரலாறு படித்துள்ள நான், இனி சட்டம் படிக்க முடிவெடுத்துள்ளேன். எப்படியாவது என் மகள்களின் அன்பை பெற்று, அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். என்னைப் போன்று படிப்புக்காகவும், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.’’ என்றார்.
செல்லதாய்க்கு தமிழ், ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரியும். மலையாளம், தெலுங்கு, ஹிந்தியில் பேசவும் தெரியும்.