/tamil-ie/media/media_files/uploads/2020/09/air-india.jpg)
இந்த 2020-ம் ஆண்டு பல வலிகளையும் வேதனைகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதார பிரச்சனை, வேலை இழப்பு, போக்குவரத்துப் பிரச்சனை என இதன் பட்டியல் அதிகம். அதிலும், வெளிநாட்டில் மாட்டிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
உலகளவில் ஒன்பது நாடுகளிலிருந்து மீட்பு விமானங்களுக்காகப் பதிவு செய்துள்ள சுமார் 68,000 தமிழர்கள், நாடு திரும்பக் காத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாட்டிலிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவுசெய்த 1.48 லட்சம் பேரில், 79,000 பேர் கடந்த நான்கு மாதங்களில் வந்தே பாரத் மற்றும் சார்ட்டர் விமானங்கள் மூலம் அந்தந்த மாநிலத்திற்குத் திரும்பினர் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்தார். மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி கே.நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு எழுத்துவடிவில் முழு விவரங்களோடு இத்தகைய பதிலைச் சமர்ப்பித்தார் முரளிதரன். மேலும், வந்தே பாரத் பணி தனது ஆறாவது கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பதிவுசெய்தவர்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நாடு திரும்பியிருந்தாலும், சுமார் 40,000 பேர் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வீடு திரும்ப இன்றும் காத்திருக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்புவதற்கு சுமார் 60,000 பேர் பதிவு செய்திருந்தனர், அவர்களில் 25,572 பேர் கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். பஹ்ரைன், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் சிக்கித் தவிக்கின்றனர். ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 176 மற்றும் 240-ஆக உள்ளது. மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலின்படி, ஈராக், மலேசியா மற்றும் தென் கொரியாவிலிருந்து பதிவு செய்த அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.
"ஏராளமான மக்கள் நாடு திரும்ப விமானங்களை இன்றும் கோருகின்றனர். பலரின் தனிமைப்படுத்தலுக்கு நிதியளிப்பதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவியுள்ளோம். திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் இதில் பெரும்பான்மையானவர்கள்” என்று நவஸ்கனி கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நிவாரண விமானங்கள் சென்னை விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. இருப்பினும், பதிவுசெய்த அனைவரும் திரும்பி வருகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், "துபாய், கொழும்பு, ரியாத், ஓமான், பஹ்ரைன், டாக்கா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நிவாரண விமானங்கள் தொடர்ந்து கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. வந்தே பாரத் விமானங்கள் தீவிர செயல்பாட்டில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, மக்கள் சார்ட்டர் விமானங்களிலும் வருகிறார்கள். வரும் நாள்களில் அதிகப்படியான விமானங்களை இயக்கவிருக்கிறோம் ”என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.