சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பு தெரிவித்தாலும், தங்கள் வாழ்நாள் சேமிப்பையும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தையும் இழந்து நிற்கும் மக்களின் கண்ணீர், பெரும் கேள்விகளை எழுப்புகிறது.
பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் ஆற்றை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது. சுமார் 600 வீடுகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வருவதால், அங்கு வசிப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 6 நாட்களாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. தற்போது வரையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து, மீதமுள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
40, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களின் நிலையை யார் காப்பது? வீடுகளை இழந்தவர்களுக்கு பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.17 லட்சம் மதிப்பிலான வீடுகளுடன், ஓராண்டுக்கான வாழ்வாதார உதவியாக 30,000 ரூபாயும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஓரளவு ஆறுதல் அளித்தாலும், மக்களின் மனக்குமுறல்கள் நீங்கவில்லை என்றே சொல்லலாம்.
அப்பகுதியில் வசிக்கும் நபர் கூறியதாவது: "என் குழந்தைகள் கல்லூரியில் படிக்கிறார்கள். இதுவரை இங்கேயே பள்ளிக்கு சென்று வந்தார்கள். எங்களுக்கு இங்கு வாழ்வாதாரம், தொழில் எல்லாம் இருந்தது. எங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. பெரும்பாக்கம் மற்றும் கீழ்பாக்கத்தில் உள்ள பகுதிகள் 'சிட்டி'யாக மாறிவிட்டன. அங்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழங்கும் இடங்களாக மாறிவிட்டன. அங்கு சென்றால் எங்கள் குழந்தைகள் கெட்டுப்போய்விடுவார்கள். நாங்கள் ஒற்றுமையாக வாழும் இடம் இது. இங்கு மசூதி, தேவாலயம், கோயில்கள் என எங்கள் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு எப்படி செல்வது?" இவ்வாறு அவர் கூறினார்.
இடிக்கப்படும் பகுதிகளில் 1990களில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கிணற்றின் சுற்றுச் சுவர் கூட 1990ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகள் வெறும் வீடுகள் மட்டுமல்ல, பல தலைமுறைகளின் நினைவுகள், உறவுகள், வாழ்வியல் சங்கிலிகளின் அடையாளங்களாகவும் இருந்துள்ளன. ஒரு வழிபாட்டுத் தலம் தற்போது இடிக்கப்படாது என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதைச் சுற்றியிருந்த குடியிருப்புகள் அழிக்கப்படுவது, அந்த வழிபாட்டுத் தலத்தின் தனித்தன்மையை சிதைப்பதாக அமையும்.
வீடுகளை இடிக்கும் பணியில் 7 ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையின் பலத்த பாதுகாப்பு, மக்களின் எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் மக்கள், "நாங்கள் வாழ்ந்த பகுதி இது, எங்களை உடனடியாக இங்கிருந்து அப்புறப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று வேதனை தெரிவிக்கின்றனர்.