சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஏழு கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர் அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி ஏற்பு உறுதி மொழியை ஏற்றுவைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். ஆனால் தற்போது 56 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். புதிதாக ஏழு நீதிபதிகளை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் குழுவுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி வழக்கறிஞர்களாக பணிபுரிந்துவரும் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியபிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை கடந்த 1 ஆம் தேதி மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, இவர்கள் ஏழு பேருக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்தார்.
ஏழு பேர் பதவியேற்றதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.