ஃபீஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் இருந்த வீடுகளில் சரிந்தது. இதில் ராஜ்குமார் என்பவரின் வீட்டில் அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டு வீடு மண்ணுக்குள் புதைந்துள்ளது.
இதில் 5 குழந்தைகள், 2 பெரியவர்கள் உள்பட 7 பேர் சிக்கி உள்ளனர். ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து காவல் துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி. சுதாகர் ஆகியோர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் எ.வ வேலு கூறுகையில், 1965க்குப் பிறகு திருவண்ணாமலையில் அதிக மழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மண் மற்றும் கல்லின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், பிற்பகலில் ஐஐடி வல்லுநர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர். மீட்பு பணி மேற்கொள்ளும் இடத்திற்கு அருகே ராட்சத பாறை உள்ளதால் பணி கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மலைப் பாதை என்பதால் இடர்பாடுகளால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் நிலவி வருகிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“