வேலூர் சி.எம்.சி கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஸ்டேஷன் ஜாமீனில் அவர்களை விடுவித்துள்ளது. மேலும் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானது. இதனை ராகிங்கில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரில் 7 மாணவர்கள் மீது ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படியுங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு? – சென்னையில் பல இடங்களில் சோதனை
இந்தநிலையில், ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களான ஸ்ரீகாந்த், அன்பு சாலமன் டினோ, பஹத் சிங், தக்க ஸ்டாலின் பாபு, கிருஷ்ண சைதன்யா ரெட்டி, ஜனார்த்தனன் அழகர்சாமி, முனிராஜுலு ஏனோஷ் அன்பிஷேக் ஆகிய 7 பேரையும் வெள்ளிக்கிழமை ஸ்டேஷன் ஜாமீனில் பாகாயம் காவல்துறையினர் விடுவித்தனர். மேலும், போலீசார் சம்மன் அனுப்பும் போது விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
”தேவைப்பட்டால் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்துவோம் அல்லது வழக்கில் தொடர்புடையவர்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வரச் சொல்வோம்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உளவியல் குறைபாடுகள் உள்ளதா என முதற்கட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பலப்படுத்தப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விடுதியில் சி.சி.டி.வி கேமராக்கள் முக்கிய இடங்களில் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் வெளியான வீடியோ பதிவு குறித்து, காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“சீனியர் மாணவர்கள் புதிய மாணவர்களை நன்றாக அறிந்துகொள்ளும் முயற்சியில் அவர்களுடன் பழகுவது போன்ற ராகிங் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மற்றும் தடை செய்யப்படவில்லை. ஆனால் சீனியர்கள் உடல் மற்றும் பாலியல் மிரட்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை பயன்படுத்தினால், அது ஜூனியர்களை வாழ்நாள் முழுவதும் காயப்படுத்தலாம்,” என்று பெயர் வெளியிட விரும்பாத சீனியர் மாணவர் கூறினார்.
“சி.எம்.சி.,யில் உள்ள வழக்கமான நடைமுறை என்னவென்றால், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரிய உறுப்பினரை ஆலோசகராக ஒதுக்க வேண்டும், அவர்களுடன் கல்வி சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். தேவைப்பட்டால், தனிப்பட்ட பிரச்சினைகளையும் அவர்கள் விவாதிக்கலாம்” என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil