“200 ரூபாய் வந்த வீட்டுக்கு ரூ.1200 கரெண்ட் பில்.. இப்போ 70ஆயிரம்.. திகைத்து நிற்கும் தொழிலாளி குடும்பம்
வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது. அதற்கு அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியாக அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் முப்பதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் வாரம் 6 ஆயிரம் ரூபாய் நீங்கள் கட்டுங்கள் என தெரிவித்துள்ளனர்.
மின்சார கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளி குடும்பம்
கோவை கரும்பு கடையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக அதிர்ச்சியுடன் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
Advertisment
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முஸ்தப்பா என்பவரின் மனைவி ஹாபியா. இவரது வீட்டிற்கு மின் கணக்கீடு செய்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்னர் மின்சார துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வந்துள்ளனர். கடந்த 30ம் தேதி வந்து மின் கணக்கீடு எடுத்துள்ளனர்.
அப்பொழுது அவர் வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் ஹாபியா முறையிட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியாக அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் முப்பதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் வாரம் 6 ஆயிரம் ரூபாய் நீங்கள் கட்டுங்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டிற்கு எப்படி மின் கட்டணமாக இத்தனை ரூபாய் வரும் எனவே தன்னால் செலுத்த இயலாது உடனடியாக இது குறித்து என்ன நடந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியத்தில் ஹாபியா புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் குறித்து மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஹாபியா இன்று கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
ரூ.70 ஆயிரத்துக்கான மின்சார கட்டண ரசீது
இது குறித்து ஹாபியா கூறுகையில், “எங்களுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை மட்டுமே மின் கட்டணம் வரும். கடந்த மாதம் 1200 ரூபாய் மின் கட்டணமாக வந்தது. நாங்கள் இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தோம் . இந்த பணத்தை எங்களால் கட்ட முடியாது மீட்டர் பாக்ஸ் மாற்றி ஆறு மாதம் ஆகிறது. எங்கள் வீட்டில் டிவி, ஃபேன், ஃப்ரிட்ஜ் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றோம்.
எங்கள் வீட்டில் வேறு எந்த மின் பொருளும் இல்லை. 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரிகள் தற்பொழுது 40 ஆயிரம் ரூபாயை நாங்கள் சலுகையாக தருகிறோம் என தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறு பாதிக்கப்பட்ட புகார்தாரர் ஹாபியா தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/