/tamil-ie/media/media_files/uploads/2018/01/e.jpg)
சென்னை அண்ணாநகரில் வங்கி அதிகாரிபோல் பேசி மூதாட்டியிடம் ரூ.90,000 மோசடி செய்யப்பட்ட நிலையில், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (70). இவரது கணவர் கருவூல அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஜெயலட்சுமிக்கு வங்கி கணக்கு உள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெயலட்சுமிக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில், தான் வங்கி அதிகாரி பேசுவதாகவும், தங்களது ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிவிட்டதாகவும் கூறி, அதை புதுப்பிப்பதற்காக ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை கூறுமாறு தெரிவித்துள்ளார்.
அதனை நம்பிய ஜெயலட்சுமி, தன் ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை கூறியுள்ளார். அதன்பின், அவரது செல்போனுக்கு வரும் ஒன் டைம் பாஸ்வேரடு எண் வரும் எனவும், அதனை கூறுமாறும் தெரிவித்துள்ளார் அந்த மர்ம நபர். அதேபோல், ஜெயலட்சுமியும் தன் செல்ஃபோனுக்கு வந்த ஒன் டைம் பாஸ்வேர்டு எண்ணை தெரிவித்திருக்கிறார்.
அதன்பின், “நாளை உங்களுக்கு புதிய ஏ.டி.எம். கார்டு வந்துவிடும். வங்கிக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள்”, என கூறியுள்ளார் அந்நபர்.
இதையடுத்து, வங்கிக்கு சென்ற ஜெயலட்சுமிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்டு எண் மூலம், அவரது கணக்கில் இருந்த 90,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டது வங்கி அதிகாரிகள் மூலம் ஜெயலட்சுமிக்கு அப்போதுதான் தெரியவந்தது.
இதனால், மனவேதனையடைந்து உறவினர்களிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார் ஜெயலட்சுமி. இந்நிலையில், ஜெயலட்சுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பண மோசடியால் ஏற்பட்ட மனவேதனையிலேயே ஜெயலட்சுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, உறவினகள் அளித்த புகாரின்பேரில் பணத்தை மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.