குடியரசு தின விழா: வீரதீர செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கிய முதல்வர் பழனிசாமி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மேலையூரைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்று வரும் விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். தேசியக்கொடியை ஏற்றி வைத்தபோது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அதன்பின்னர் வீரதீர செயல்களுக்கான பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னையைச் சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மேலையூரைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

2018ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மருத்துவர் அமுதாவிடம் செயின் பறித்து தப்பி ஓடிய கொள்ளையனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த, துணிச்சல் மிக்க செயலுக்காக சூரியகுமாருக்கும், 2019 மார்ச் 11ல் குரங்கணி தீ விபத்தில் 8 பேரை காப்பாற்றியதற்காக ரஞ்சித்குமாருக்கும், 2018 டிசம்பர் மாதம் 2ம் தேதி வெள்ளங்கி ஏரியில் விழுந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை காப்பாற்றியதற்காக ஸ்ரீதருக்கும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் பதக்கங்களையும் முதலமைச்சர் வழங்கினார். இதேபோல் புதுக்கோட்டை வடக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்த விவசாயி சேவியருக்கு வேளாண்மைத்துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய போலீஸார், துணை ராணுவத்தினர் என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 855 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 போலீஸாருக்கு தகைசால் பணிக்கான விருதும், 21 போலீஸாருக்கு பாராட்டத்தக்க பணிக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகைசால் பணிக்கான விருது பெறுவோர்: பி.கோவிந்தசாமி (டிஎஸ்பி, திருச்சி), இ.சொரிமுத்து (சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர், ஈரோடு).

பாராட்டத்தக்க பணிக்கான விருது பெறுவோர்: சென்னை தெற்கு இணை ஆணையர் சி.மகேஸ்வரி, ராமநாதபுரம் டிஐஜி ந.காமினி, எஸ்.பி. சு.சாந்தி (சென்னை போலீஸ் அகாடமி), பல்லாவரம் உதவி ஆணையர் கேபிஎஸ் தேவராஜ், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கே.கனகராஜ் ஜோசப், சென்னை ஏஎஸ்பிக்கள் எம்.எம்.அசோக் குமார், கே.ராஜேந்திரன், டிஎஸ்பிக்கள் எஸ்.கேசவன் (சென்னை எஸ்பிசிஐடி), எம்.வெற்றி செழியன் (மதுரை), எஸ்.சங்கர் (சென்னை ஊழல் தடுப்பு துறை), வீராபுரம் உதவி கமான்டன்ட் எம்.ஆறுமுகம், ஆய் வாளர்கள் கே.சங்கர சுப்ரமணியன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), எஸ்.ஜான் விக்டர் (திருவள்ளூர் மதுவிலக்கு), வி.கணேசன் (காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு துறை).

சென்னை குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆர்.ஜனார்த்தனன், சிறப்பு எஸ்.ஐ.க்கள் ஜே.உலக நாதன் (சென்னை குற்றப் புல னாய்வு துறை பாதுகாப்பு பிரிவு), பி.முத்துராமலிங்கம் (ராமநாதபுரம் ஊழல் தடுப்பு துறை), ஐ.ஸ்ரீனிவாசன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), எச்.குணாளன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), கே.புருஷோத்தமன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), தலைமை காவலர் என்.பாஸ்கரன் (சென்னை குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு பிரிவு).

சென்னையில் குடியரசு தின விழாவையொட்டி மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க – Republic Day Parade 2019 Live: கோலாகலமாக தொடங்குகிறது 70வது குடியரசு தின விழா

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 70th republic day celebration at chennai cm palaniswamy governor banwarilal purohit

Next Story
ஜாக்டோ ஜியோ போராட்டம்: கைதான நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல்! தற்காலிக ஆசிரியர்களின் சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்வு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X