தி.மு.க-வில் செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் 74 தி.மு.க கிளைச் செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக உள்ளனர். ஆனால், தேர்தலை நடத்தாமல் ரவிசங்கர் என்பவரைத் செங்கோட்டை ஒன்றிய செயலாளராகத் தேர்வு செய்த தி.மு.க மேலிடத்தை கண்டித்து சென்னை மெரினாவில் உள்ல கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன் காலவரையற்ற தர்ணா நடத்த திடீர் முடிவு செய்துள்ளனர்.
செங்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க-வின் 74 கிளைச் செயலாளர்கள், ஒன்றியப் பிரதிநிதிகள் என மொத்தம் 93 நிர்வாகிகள் தி.மு.க.வின் செங்கோட்டை ஒன்றியச் செயலாளரைத் தேர்ந்தெடுபதற்கான தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். ஆனால், தேர்தல் நடத்தாமல் ரவிசங்கர் என்பவரை கட்சி மேலிடம் செங்கோட்டை ஒன்றியச் செயலாளராக தேர்வு செய்ததாகக் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, தி.மு.க-வின் மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளரும் ஒன்றியச் செயலாளருமான எஸ். பரமசிவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
எஸ். பரமசிவன் ஊடகங்களிடம் கூறுகையில், “தி.மு.க-வில் செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் பதவிகான தேர்தலில் தகுதியுள்ள வாக்காளர்களில் மொத்தம் 74 பேர் என்னை ஒன்றியச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்க விரும்பினர். அவர்கள் அனைவரின் கையொப்பமிடப்பட்ட ஆதரவுக் கடிதத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் அன்பகம் கலையிடம் நான் முன்பே அளித்திருந்தேன். அவர்கள் 74 பேரும் என்னுடன் கே.கே.எஸ்.எஸ்.ஆரையும் கலையையும் சந்திக்க வந்திருந்தனர். ரவிசங்கரின் கட்சி விரோதச் செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.
மேலும், “தி.மு.க தலைவராக கலைஞர் இருக்கும் வரைதான் கட்சியில் ஜனநாயகம் இருந்தது. மு.க.ஸ்டாலின் தனது பல பொறுப்புகளை கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் பல விஷயங்களில் தவறிழைத்துள்ளனர்” என்று எஸ். பரமசிவன் கூறினார்.
அதே நேரத்தில், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ரவிசங்கர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பரமசிவனும் அவருடைய மனைவியும் அ.தி.மு.க-வுக்காக பணியாற்றியதால், தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பரமசிவனை ஒன்றியச் செயலாளராக்க விரும்பவில்லை என்று ரவிசங்கர ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
இருப்பினும், மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் அருகே தி.மு.க நிர்வாகிகள் 74 பேர் தர்ணா நடத்த உள்ளதாக திடீர் முடிவெடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"