ammonium nitrate from Chennai to Hyderabad : சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களில் இன்று இடமாற்றம் செய்யப்படுகின்றன. 2 ஆம் கட்டமாக 12 கண்டெய்னர்கள் மூலம் ஹைதராபாத் கொண்டு செல்லப்படவுள்ளன.
கரூரைச் சேர்ந்த பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்டை கடந்த 2015-ஆம் ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் இறுதியில் அந்த நிறுவனத்திற்கு அமோனியம் நைட்ரேட்டை வழங்க முடியாது எனவும் தேசப் பாதுகாப்பு கருதி உரிய அனுமதி சான்று பெற்றவர்களுக்கு இதை ஏலம் விட வேண்டும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் உலகத்தையே புரட்டி போட்டது. பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்தவுடன் சென்னையில் இருக்கும் மணலியில் உள்ள கிடங்கில் அம்மோனியம் நைட்ரேட் குறித்து தகவல்கள் வெளி வரத்தொடங்கின.
மொத்தம் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அம்மோனியம் நைட்ரேட் வெப்பம் அதிகரிப்பால் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் உடனடியாக இந்த அம்மோனியம் நைட்ரேட் இணையம் மூலம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது. சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களாக பாதுகாப்பான இடத்தில் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதால் பிரச்சனை இல்லை. நீண்ட நாட்களுக்கு அம்மோனியம் நைட்ரேட் இங்கே இருக்காது. உடனே இதை விற்பனை செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது . ஹைதராபாத் நிறுவனம் ஒன்று இந்த அம்மோனியம் நைட்ரேட்டை வாங்கிய நிலையில் தற்போது அந்த அம்மோனியம் நைட்ரேட் இடமாற்றம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக சுங்கத்துறை, காவல்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் கண்கானிப்பில் பாதுகாப்புடன் 181 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பத்து கண்டெய்னர் லாரிகளில் சென்னை மணலியில் இருந்து ஹைதராபாத்துக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.
அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்த ஐதராபாத் தனியார் நிறுவனம், கண்டெய்னர்கள் மூலம் சென்னை மணலியில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் அவற்றை சாலை மார்க்கமாக எடுத்து செல்கிறது. சென்னையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் அடங்கிய எஞ்சிய கன்டெய்னர்கள், இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் ஏலம் எடுத்தவர்களுக்கு அனுப்பப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
இன்று 2 ஆவது கட்டமாக 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களில் இடமாற்றம் செய்யப்படுகின்றன. எனவே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook