ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட 75 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தமிழ் மகன் ஈவெராவின் மரணத்தை தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத் தேர்தல் நடக்க உள்ளது.
இங்கு பிப்.27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் தமிழ் மகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு கை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா களத்தில் உள்ளார். இவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்துக் கொட்டும் முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகிவிட்டார்.
இதையடுத்து அவர் கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்களும் வாபஸ் பெற்றுவிட்டனர்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வசதியாக ஓ.பன்னீர் செல்வமும் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுவிட்டார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சைகள் உள்பட 75 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு டி.டி.வி. தினகரனின் குக்கர், கமல்ஹாசனின் டார்ச் லைட் உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/