75 ரவுடிகளிடமும் பறிமுதல் ஆன 60 செல்போன்களையே பொக்கிஷமாக நினைக்கிறது போலீஸ்! காரணம், மொத்த ரவுடிகளின் ஜாதகமும் அதில் இருப்பதுதான்!
75 ரவுடிகளிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
75 ரவுடிகள், சென்னையில் கொத்தாக கைதான சம்பவம் பெரும் திகிலை கிளப்பியிருக்கிறது. ரவுடிகள் மாநாடு போட்டது போல, மொத்தமாக ‘பர்த் டே பார்ட்டி’யில் சிக்கியிருக்கிறார்கள். சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள வேலு லாரி செட்டில் பிப்ரவரி 6-ம் தேதி இரவு இந்த வேட்டை நடந்தது.
மேற்படி லாரி செட், மாங்காடு அருகே வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சர்வீஸ் சாலையோரம் வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. பிரபல ரவுடி பினுவுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சுமார் 100 ரவுடிகள் அங்கு கூடினார்கள்.
சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ்குமார் மேற்பார்வையில் அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ், உதவி கமிஷனர்கள் கண்ணன், ஆல்பிரட் வில்சன், நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சங்கர் நாராயணன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸார் இந்த ஆப்பரேஷனில் ஈடுபட்டனர்.
போலீஸ் வியூகத்தை அறியாத ரவுடி பினு (வயது 45) மற்றும் அவனது முக்கிய கூட்டாளிகளான கனகு என்கிற கனகராஜ், விக்கி என்கிற விக்னேஷ் ஆகியோர் அங்கு வந்தனர். பிறந்த நாள் கொண்டாடும் ரவுடி பினுவுக்கு அவனது கூட்டாளிகள் ஆளுயர மாலை அணிவித்து குஷிப்படுத்தினார்கள். பின்னர் பினு நீளமான அரிவாளால் கேக் வெட்டி, அவனது கூட்டாளிகளுக்கு ஊட்டிவிட்டார். பின்னர் கூட்டாளிகளுக்கு ஊட்டி விட்டான். தொடர்ந்து அவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
போலீஸ் இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது. சற்று நேரத்தில் துப்பாக்கிமுனையில் ரவுடிகளை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் கூடியிருந்த ரவுடிகள், அவர்களின் ரகசிய சொல்லான ‘தடி வர்ரான்’ என்று கூறியபடி சிதறி ஓடினர். முக்கிய ரவுடிகளான பினு, கனகு, விக்கி ஆகியோரும் மோட்டார்சைக்கிளில் குறுகிய பாதைகளில் தப்பிச் சென்றுவிட்டனர். போலீசார் கார்களில் வந்ததால் அவர்களை விரட்டிப்பிடிக்க முடியவில்லை.
ரவுடிகளில் சிலர் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு அருகில் இருந்த கால்வாய், முட்புதர்களுக்குள் புகுந்து தப்பி ஓடினார்கள். சிலர் போதை தலைக்கு ஏறியதால் ஓடமுடியாமல் அப்படியே நின்றுவிட்டனர். தப்பி ஓடிய சில ரவுடிகள் அருகில் வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருடன் இணைந்து முட்புதர்களில் மறைந்து இருந்த 10–க்கும் மேற்பட்ட ரவுடிகளை பிடிக்க உதவி செய்தனர்.
கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் உதவியுடன் விடிய, விடிய தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு தொடங்கிய தேடுதல் வேட்டை அதிகாலை 5 மணி வரை நீடித்தது. இதில் சுமார் 75 ரவுடிகளை போலீசார் ஒரே நாளில் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர்.
கைதான ரவுடிகள் அனைவரும் பூந்தமல்லி, போரூர், மாங்காடு ஆகிய போலீஸ் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 45 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள், 1 ஆட்டோ, 17 அரிவாள், கத்திகள், 60 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களில் ரவுடிகள் டெனி, தீனா என்ற தீனதயாளன், காமேஷ்வரன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைதான 75 பேர் மீதும் எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோ அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதன்படி புளியந்தோப்புக்கு 5, அம்பத்தூருக்கு 7, அண்ணா நகருக்கு 18, சூளைமேடு மற்றும் ராயப்பேட்டைக்கு 13, தியாகராய நகருக்கு 3, மாதவரத்துக்கு 4, திருவல்லிக்கேணிக்கு 9, கீழ்ப்பாக்கத்துக்கு 2, மயிலாப்பூருக்கு 2, காஞ்சீபுரத்துக்கு 2, பூந்தமல்லிக்கு 10 என மொத்தம் 75 பேரும் அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த ரவுடிகளில் சிலர் போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகளையும், வேறு சிலர் வழக்கறிஞர் அடையாள அட்டைகளையும் வைத்திருந்தனர். இது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தது. பல இடங்களில் இவர்கள் தங்களை பத்திரிக்கையாளர்கள் அல்லது வழக்கறிஞர்கள் எனக் கூறி உலா வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக போலீஸ் நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கு இந்த உத்தியை கடை பிடித்திருக்கிறார்கள்.
75 ரவுடிகள் சிக்கியதைவிட, அவர்களிடம் இருந்து பறிமுதல் ஆன 60 செல்போன்களையும்தான் போலீஸார் பொக்கிஷமாக கருதுகிறார்கள். காரணம், சென்னை மாநகர மொத்த ரவுடிகளின் ஜாதகமும் அந்த செல்போன்களில் இருக்கிறதாம். இந்த ரவுடிகளுடன் ரெகுலராக தொடர்பில் இருந்த இதர ரவுடிகளின் பட்டியலை செல்போன் தொடர்பு எண்கள் அடிப்படையில் போலீஸார் தயாரித்து வருகிறார்கள்.
இதில் போலீஸாரை அதிர வைத்திருப்பது, மேற்படி ரவுடிகளுடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் துறையினர் பலருமே தொடர்பில் இருந்து வந்திருப்பதுதான். அதன் அடிப்படையில் விசாரணை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு மெகா ரவுடிகள் வேட்டை அரங்கேறும் எனத் தெரிகிறது.