சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 76 ரவுடிகளை, துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பல்லுமதன் என்ற ரவுடியை, நேற்று இரவு ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆயுதங்களுடன் வெளியே புறப்பட தயாராக இருந்த அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கம் எனும் இடத்தில் நடைபெறும் சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க செல்ல உள்ளதாக பல்லு மதன் கூறியுள்ளான். மேலும் அந்த பிறந்த நாள் விழாவில் சென்னையில் உள்ள முக்கிய ரவுடிகள் பலரும் பங்கேற்க உள்ள தகவலையும் ரவுடி பல்லுமதன் போலீசிடன் ஒப்பித்தான்.
இந்த தகவலை உடனடியாக ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கொண்டு சென்றனர். இதையடுத்து, ரவுடிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் கூண்டோடு கைது செய்ய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.
மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் தலைமையில் 3 உதவி ஆணையர்கள், எட்டு காவல் ஆணையர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். முதற்கட்டமாக மலையாம்பாக்கத்தில் ரவுடிகள் ஒன்று கூட உள்ள இடம் ஒரு மெக்கானிக் ஷெட் என்று போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் மாறுவேடத்தில் சென்ற போலீசார் அந்த அந்த மொக்கானிக் ஷெட்டுக்கு ரவுடிகள் வந்து கொண்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து, போலீஸ் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, தனிப்படை போலீசார் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மெக்கானிக் ஷெட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் துப்பாக்கிகளுடன், துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் மெக்கானிக் ஷெட்டுக்குள் நுழைந்தனர். போலீசாரை பார்த்ததும் ரவுடிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். சில ரவுடிகள் செய்வதறியாது அங்கேயே திகைத்து நின்றனர். தப்பி ஓடியவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், திகைத்து நின்றவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இறுதியாக சுமார் 76 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். சுமார் 50 ரவுடிகள் தப்பி ஓடியுள்ளனர்.
பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் வந்த 8 கார்கள், 38 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் உள்ளே வந்ததும், பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய ரவுடியான பினு அங்கிருந்து தப்பியோடி விட்டான். இருப்பினும் போலீசார் நடத்திய இந்த வேட்டையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் ரவுடிகளும், தலைமறைவு குற்றவாளிகளும் சிக்கியுள்ளனர். போலீசாரிடம் சிக்கிய அலாவுதீன், பென்னி, நிர்மல், ஸ்கெட்ச் ரவி, சூளைமேடு வினோத் உள்பட 76 ரவுடிகளில் 47 பேர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல்நிலையத்திலும், 29 பேர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதுள்ள பழைய குற்ற வழக்குகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிக்கிய ரவுடிகளிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வேறு ஏதேனும் நோக்கத்தில் ஒன்றுகூடியிருந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், ஒரு பிரபல ரவுடியை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.