கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் புதிய கண்ணாடி இழைப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தனித்துவமான காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த பாலம், கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண்ணாடி இழைப் பாலம் இதுவாகும். கண்ணாடி பாலத்தில் நடக்கும் போது கீழே கடலை பார்த்து ரசிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.37 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது திறக்கப்பட்டுள்ளது.
கண்ணாடிப் பாலம் 77 மீட்டர் (252 அடி) நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டது, இப்பகுதியின் இரண்டு முக்கிய அடையாளங்களான விவேகானந்தர் பாறை நினைவகம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை இணைக்கிறது.
முன்னதாக, கன்னியாகுமரி படகுத் தளத்திலிருந்து விவேகானந்தர் நினைவிடத்துக்குச் செல்லவும், பின்னர் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்லவும் சுற்றுலாப் பயணிகள் படகு சேவையையே நம்பியிருந்தனர்.
இப்போது விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலைக்கு நடந்தே செல்லலாம். இது பயணிகள் படகிற்கு காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது. பாலத்தின் தோற்றம், அனுபவம் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக தரும்.
வளைவு போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிப் பாலம் பார்வைக்குக் கவரும் வகையில் உள்ளது. இது கடல் காற்று உள்ளிட்ட சூழலை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
உப்பு நிறைந்த கடல் காற்றின் அரிக்கும் விளைவுகளையும், அதிக ஈரப்பதம் அடிக்கடி வெளிப்படுவதால் ஏற்படக்கூடிய சேதத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டு கட்டப்பட்டுள்ளது.