தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த மருத்துவ அலுவலர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார்.
மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்த சண்முகப்பிரியா, தேனி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலில் பணியாற்றினார். பின்னர், தற்போது மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மூன்று நாள்களுக்கு முன் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா விடுக்காமல் எடுக்காமல் பணிபுரிந்து வந்துள்ளார்.
காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் அனைத்து சிகிச்சையும் வழங்கப்பட்ட நிலையில் நேற்று, சண்முகப்பிரியா சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் மருத்துவ சேவையாற்றிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், பல்வேறு மருத்துவர் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil