தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பயிற்சிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Ramajayam.jpg)
பத்து ஆண்டுகளைக் கடந்தும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படாமல் தமிழக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டனர்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் வருகை: சிதைந்த சீர்காழி சீராகுமா?
வழக்கு சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி என பல்வேறு நிலுவைகளை கடந்து, தற்போது நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர், ராமஜெயம் கொலை வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர். திருச்சி ஜே.எம் 6 நீதிமன்றத்தில் நீதி அரசர் சிவக்குமார் அமர்வில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 13 பிரபல ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, கடந்த 1ஆம் தேதி திருச்சி சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சிவக்குமார் அமர்வு, உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்த நிலையில், நவம்பர் 7ஆம் தேதி விசாரணையில், 14- ஆம் தேதி (இன்று) குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-14-at-14.13.34.jpeg)
இந்த உத்தரவின்படி, மோகன்ராம், தினேஷ், கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் எனும் லட்சுமிநாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா, கடலூர் சிறையில் இருக்கும் செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், 9 பேர் மட்டும் இன்று ஜே.எம் 6 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
இந்த வழக்கில் ரவுடிகள் சாமி ரவி, சத்யராஜ், லட்சுமி நாராயணன், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். ஆனால், தங்கள் மருத்துவர் மற்றும் தங்களது வழக்கறிஞர் இந்த சோதனையின்போது இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-14-at-14.13.33.jpeg)
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான 9 பேரில் தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் ஏற்கனவே தான் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், அதனால் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்து விட்டார். திண்டுக்கல் மோகன்ராம், கணேசன், தினேஷ், கடலூர் சிறையில் உள்ள செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சிவக்குமார் வரும் 17ஆம் தேதி அன்று ஆஜராகாத ரவுடிகளை கட்டாயம் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். எனவே வரும் 17-ம் தேதி ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil