நோய் எதிர்ப்புக் கிருமிகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில் (sero survey), சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்கு சார்ஸ்-கோவ்.-2 (SARS-Cov-2) பாதிப்பு இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
Advertisment
ஒருவரின் ரத்தத்தில் உள்ள சீரத்தில் ஐஜிஜி (IgG) ஆன்டிபாடிகளும், தொற்றும் உள்ளனவா என்பதை கண்டறிவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் பெருந்தொற்று பரவலை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய சான்றினை செரோ-கண்காணிப்பு ஆய்வு அளிக்கிறது.
நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் (அறிகுறிகள் கொண்ட/ அறிகுறியற்ற), ஆன்டிஜெனுடன் பொருந்தக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. இந்த ஆன்டிபாடிகள் அனைத்தும் ஒருவரின் நோய் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நீண்ட காலத்திற்கு(சில மாதங்களுக்கு) சேமித்து வைக்கப்படும். எனவே, கொரோனா தொடர்பான குறிப்பிட்ட ஆன்டிபாடிகளைக் கண்டறிவதன் மூலம் அந்த நபர் ஒரு கட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிய முடிகிறது.
Advertisment
Advertisements
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், சுமார் 12,405 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஐஜிஜி (IgG) ஆன்டிபாடிகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதிக்கப்பட்டவர்களில், 173 பேர் மட்டுமே கோவிட் -19 நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. ஆய்விற்கான தரவு சேகரிப்பு ஜூலை 18 முதல் 28 வரை நடந்தது என்றும், ஜூலை இறுதியில் கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (positivity rate) சுமார் 10 சதவீதமாக இருந்தது.
சென்னையில் 80% மக்கள் இன்னும் சார்ஸ்- கோவ் 2 தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பும் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், சென்னை மண்டலவாரியாக ஐஜிஜி ஆன்டிபாடிகள் பரவல் விகிதம் (seroprevalence ) பெரிதும் மாறுபடுகிறது என்பதையும் ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக, மாதவரத்தில் ஐஜிஜி ஆன்டிபாடிகள் பரவல் விகிதம் 7.1 சதவீதமாகவும், தண்டையார்பேட்டையில் 44.2% சதவீதமாகவும் உள்ளன.
ஆய்வில் 6,493 பெண்கள் மற்றும் 5,785 ஆண்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், 1,538 பெண்களுக்கும், 1,115 ஆண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, சென்னையில் பெண்களிடம் ஐஜிஜி ஆன்டிபாடிகள் பரவல் விகிதமானது 23.7 விழுக்காடாகவும், ஆண்களிடம் 19.3 விழுக்காடாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
"சென்னையின் மக்கள் தொகையில் 21.5 சதவீதம் பேர் ஜூலை இறுதிக்குள் நோய் எதிர்ப்பு சக்தி அளவை எட்டியுள்ளனர்" என்ற அனுமானத்தை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் கூறினார். "இப்போது, சென்னை மக்கள் தொகையில் அதிகமான பேருக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பதால், (ஒப்பீட்டளவில்) கொரோனா பெருந்தொற்று பரவல் விகிதம் குறையும் "என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil